அண்ணலின் அடிச்சுவட்டில்.. - TN SOCIAL SCIENCE

social science Teachers Portal

Sunday, August 27, 2017

அண்ணலின் அடிச்சுவட்டில்..

காந்திஜியின் செயலர் கல்யாணத்தின் அனுபவங்கள் 
காந்திஜி இறப்பதற்கு முந்தைய நான்கு ஆண்டுகளில் அவரது தனிச் செயலராக இருந்தவர் கல்யாணம். காந்திஜி சுட்டுக் கொல்லப்பட்டபோது அவரின் வெகு அருகில் சில அங்குல தூரத்தில் நின்றவர். காந்திஜி இறந்தபின் பஞ்சாபில் இயங்கிய கடத்தப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் மீட்புக் குழுவில் லேடி மவுண்ட்பேட்டனோடு பணியாற்றினார். புதுடெல்லியில் லேடி எட்வினா மவுன்ட் பேட்டனோடு சேர்ந்து அகதிகள் நிவாரணப்பணியிலும் அவர்களின் மறுவாழ்விற்காக ஐக்கிய நாடுகள் சபை, மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஒருங்கிணைந்த பணியிலும் ஈடுபட்டார். அதன்பின் ரிஷிகேஷில் மீராபென் நடத்திவந்த பசுலோக் ஆஸ்ரமத்தில் ஒரு வருடம் பணியாற்றினார்.

சீனாவிற்கு பயணித்த முதல் நல்லெண்ணக்குழுவில் செயலாளராக சீனா முழுக்க 30 நாட்கள் பயணம் மேற் கொண்டார். 

ஐநா சபை அவருக்கு "வெல்ஃபேர் ஃபெல்லோஷிப்' விருதினை வழங்கி கெüரவித்தது. பின் இஸ்ரேல் மற்றும் ஸ்காண்டிநேவிய நாடுகளுக்கும் பயணித்தார். நேரு பிரதமராக இருந்த போது கூட அவருக்கு உதவியாளராக சில நாட்கள் பணியாற்றி இருக்கிறார். அவரது செயலர் எம்.ஓ.மத்தாயின் நடவடிக்கைகள் பிடிக்காமல் அங்கிருந்து விலகினார். ஹைதராபாத்திலுள்ள ஷாஹாபாதில் அசோசியேட்டட் சிமென்ட் நிறுவனத்தில் நலம் மற்றும் பாதுகாப்பு அதிகாரியாக இரண்டு வருடங்கள் பணியாற்றினார். தொடர்ந்து அவர் தாழ்த்தப்பட்ட மற்றும் மலைசாதியினருக்கான நலத்துறையில் சென்னையில் மண்டல ஆணையராக நியமிக்கப்பட்டார். 

காந்திய வழியில் சர்வோதய இயக்கத்தில் ஆசார்ய வினோபாபாவேயுடனும் ஜெயபிரகாஷ் நாராயணுடனும் தீவிரமாகப் பணியாற்றினார். ராஜாஜியோடு சேர்ந்து அவரால் தொடங்கப்பட்ட சுதந்திராக் கட்சியில் பணியாற்றினார்.

தமிழ், இந்தி, ஆங்கிலம், குஜராத்தி, வங்காளம், பஞ்சாப் என பன்மொழி வல்லுநரான கல்யாணம் பேச்சாற்றலில் வல்லவர். அந்த வல்லமையால் உலகம் முழுக்க காந்தியின் கொள்கைகளைப் பரப்ப பல்வேறு வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொண்டார். 

சுதந்திரப்போராட்ட தியாகி என்ற அளவில் நாடு அவருக்கு அளித்த எல்லா சலுகைகளையும் அவர் மறுத்தார். தனது தேவைக்கதிகமாக எதையும் தனது உடமையாக வைத்திருக்கவில்லை. நுங்கம்பாக்கத்திலுள்ள சைல்டு டிரஸ்ட் மருத்துவமனைக்கு தனது வீட்டு மனையைத் தானமாக வழங்கினார். பிரதமர் நிவாரண நிதி, முதல்வர் நிவாரண நிதி, செஞ்சிலுவைச் சங்கம், அடையாறு புற்று நோய் மருத்துவ மனை, சங்கர நேத்ராலயா, மக்கள் நல மையமென உலகின் பல சேவை நிறுவனங்களுக்கும் ஏராளமாக நன்கொடைகள் வழங்கினார்.

நாணயங்கள் சேர்த்தல், தபால் வில்லைகள் சேர்த்தல், கலை, கைவினைப் பொருட்கள், செய்தித்தாள்களின் முக்கிய செய்திக் கட்டுரைகளை வெட்டிப் பாதுகாத்தலென அவரது ஆர்வமானது விரிவானது. எல்லாவற்றிற்கும் மேலானதாக அவருக்கு பிடித்தமானது தோட்டப் பணி. 

கல்யாணத்திற்கு 92 வயதாகி விட்டது. மனைவி இறந்து 24 வருடங்களுக்கு மேலாகி விட்டன. தனித்து தன்னம்பிக்கையோடு தன்னிறைவோடு தனது வீட்டில் சதா ஏதாவது பணி செய்து கொண்டே வாழும் மாமனிதர் அவர். 

காலையில் நான்கு மணிக்கு எழுந்ததுமே காலைக் கடன்களை முடித்து விட்டு வாசலுக்கு வந்து விடுவார். வெள்ளை அரைக்கால் சட்டையும் வெள்ளை பனியனும் அணிந்து கொண்டு துடைப்பத்தை கையில் எடுத்துக் கொள்வார். வெளியே வந்து வீட்டைச் சுற்றி சுத்தம் செய்வார். வாசலுக்கு வெளியே பேருந்துகள் செல்லும் சாலையில் வீட்டிற்கு முன்னேயுள்ள பகுதியைக் கூட அவரே சுத்தம் செய்வார்.

பின் வீட்டைச் சுற்றியுள்ள ஆயிரக்கணக்கானச் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றி அவற்றின் தாகத்தை தணிப்பார். பழுத்த இலைகளைப் பறித்து உரமாக்குவார். பின் மாடிக்குச் சென்று மொட்டை மாடியிலுள்ள செடிகளுக்கும் தண்ணீர் ஊற்றுவார். படிகளின் பக்கவாட்டுச் சுவரிலுள்ள தூசுகளைத் துணியால் துடைப்பார்.

அவர் தலைமுடியை அவரே வெட்டிக் கொள்வார். ஒரு பழைய சவரக் கத்தியில் அன்றாடம் முகச் சவரம் செய்து கொள்வார். காபி போடுவார். அவரே சமையல் செய்வார். பாத்திரங்களை அவரே கழுவுவார். எண்ணெய் தாளித்த பாத்திரங்களை அப்படியே கழுவும் தொட்டியில் போட்டு விட மாட்டார். முதலில் பழையக் காகிதத்தால் அதிலுள்ள எண்ணெய்யை துடைத்து எடுப்பார். பின்னரே அதைக் கழுவுவார். அவர் வீட்டு பால் பாத்திரத்தில் தீய்ந்த அடையாளமாய் கறுப்பாய் எதுவும் ஒட்டி இருக்காது. வெள்ளிப் பாத்திரம் போல் அவை பளபளப்பாக இருக்கும். விருந்தினர்கள் அவர் வீட்டிற்கு வந்தால் அவரது தயாரிப்பில் அளிக்கும் தேநீரின் சுவையில் சொக்கிப் போவர். அவரின் வயதைக் கருதி அவர்கள் அந்த தேநீர் கோப்பையைக் கழுவ முயன்றால் அங்கே ஒரு கலகம்தான் நடக்கும். கல்யாணமே எல்லாவற்றையும் கழுவுவார்.


எந்தப் பொருளையும் விரயம் செய்வதென்பது அவருக்கு மிகவும் பிடித்தமற்றதாக இருந்தது. பத்து ரூபாயைத் தேவையற்று செலவு செய்து விட்டால் அதற்காக இரண்டு நாட்கள் வருத்தப்படுவார். அவரது அன்றாடப் பணிகளுடன் முக்கிய நிகழ்வுகளென எல்லாமே அவரது நாட்குறிப்பில் பதிவு செய்யப்பட்டு விடும்.

அன்றாடம் அனுப்ப வேண்டிய கடிதங்களை அவரே தனது பழைய ரெமிங்டன் தட்டச்சு இயந்திரத்தில் தட்டச்சு செய்வார். தட்டச்சு செய்யும் போது தன்னை மீறி பிழைகள் வரும்போது "ஐயோ ராமா'' என்று கூறி கையால் தலையில் அடித்துக் கொள்வார். அவர் தனது தட்டச்சு இயந்திரத்தில் தட்டிக் கொண்டிருப்பதை பார்த்து பலரும், "நீங்கள் ஒரு மடிக் கணினி வாங்கி அதில் இந்த வேலையை எளிதில் செய்யலாமே?'' என்பார்கள். அதற்கு, "இந்தக் காலத்து லேப்டாப், கம்ப்யூட்டர், இன்டர்நெட் என்பதைப் பற்றியெல்லாம் எனக்கு எதுவும் தெரியாதென்று அந்தக் கோரிக்கையை அப்போதே நிராகரித்து விடுவார்.

இந்தியாவில் மலிவு விலையில் ஏழைகளுக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டுமென்பது கல்யாணத்தின் ஆசை''.
(அடுத்த இதழில் கல்யாணத்தின் அனுபவங்கள்)

நன்றி 

தினமணி

By கல்யாணம் | Published on : May 2017

No comments:

Post a Comment